சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
11
21. இரு துணைவர்கள்
முன் பக்கம்
   

சுந்தரேசய்யர் வீட்டில் இல்லை. மணிலாக் கொட்டை வியாபாரி எஸ்.குப்புசாமி அய்யரின் கிடங்கில் கணக்கர் அவர். பாரதியும் குவளைக் கண்ணனும் அங்கே போனார்கள். கிடங்குக்கு அருகே பாரதியை வெளியே நிறுத்தி வைத்துவிட்டு, சுந்தரேசய்யரிடம் போய், அவரைக் காண சென்னையிலிருந்து யாரோ வந்திருப்பதாய்ச் சொன்னார் குவளை. சுந்தரேசய்யர் வெளியே வந்தார். பிறகு:

"இருவரும் தனியாக தூரத்தில் போய் ஏதோ ரகிசயமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு நான் அவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போனேன். இரண்டு மூன்று தினங்கள் கழித்து சுந்தரேசய்யரை நான் பார்த்தபோது, 'எங்கே ஐயா நான் தங்களிடம் அழைத்து வந்த கனவான்?' என்று கேட்டதற்கு, தன் ஆதரவில் ஒரு வீட்டில் அவர் இருப்பதாக சுந்தரேசய்யர் சொன்னார். எனக்கும் அவருக்கும் சிநேகம் ஆரம்பித்து ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் அவர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்றறிந்தேன்."

புதுவை வாழ்வில், முக்கியமாக ஆரம்ப காலத்தில், குவளைக் கண்ணனும் சுந்தரேசய்யரும் பாரதிக்குப் பெருந்துணையாக இருந்தார்கள். 1939ஆம் ஆண்டு ஸெப்டம்பர் முதல் வாரத்தில் குவளை சென்னையில் காலமானார்.

குவளைக் கண்ணன் படிப்பாளியல்ல; ஆனால் பாரதியிடம் ஊன்றிப்போன பக்தி கொண்டிருந்தார் அவருக்கு வியக்கத்தக்க ஞாபகசக்தி 1939லும் இருந்தது. தாம் பாடிய பாடல்களைப் பிரதியெடுக்கச் செய்து, மனப்பாடம் செய்யும்படியும் குவளைக்கு பாரதி கட்டளையிட்டார். ('கண்ணன் என் சீடன்' என்ற பாட்டில் இந்த உண்மைச் சம்பவத்தை பாரதி பாடியிருக்கிறார்.) அக்காலத்தில் தாம் மனனம் செய்த பாடல்களை, 1939லும் - முப்பதாண்டுகளுக்குப் பிறகும் - சொற் பிழையின்றிப் பாடுவார் குவளை!

குவளை மகா தீரர். இவரது பெருமையை "பாரதி அறுபத்தாறு" என்ற தொகுதியில் "குவளைக் கண்ணன் புகழ்" என்ற பாடல்களில் பாரதி பாடிப் போற்றியிருக்கிறார். "கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ணனென்பான்", "பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்; பறையரையும் மறவரையும் நிகராகக் கொண்டான், தீர்ப்பான சுருதி வழிச் சேர்ந்தான் கண்ணன்", "மிகத்தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீரர்பிரான் குவளையூர்க் கண்ணனென்பான்" என்றெல்லாம் பாரதியால் சிலாகிக்கப் பெற்ற இப் பெரியாரே, பின்னர், 1921ல் பாரதி திருவல்லிக்கேணி கோயில் யானையின் காலடியில் கிடந்த சமயம் தாவி எடுத்துக் காத்தார்.

சுந்தரேசய்யரும் எளிய வருமானமுள்ளவரே. இருபது வருஷமாய்ச் செய்து வந்த கணக்கு வேலையையும் பாரதிக்கு உதவி செய்கிறார் என்ற காரணத்தால் பின்னர் இழந்தார். போலீஸ் ஏவலாட்கள் அவரது எஜமானரைப் பயமடையச் செய்து, அவரை வேலையை விட்டு நீக்கி விடும்படி செய்தார்கள். அப்படியும், தம் ஏழ்மையிலும் பாரதிக்கு விடாமல் உதவி செய்த பெருமை இவருடையது.

குவளையைவிட சுந்தரேசய்யர் படிப்பு வாசனை அதிகமுள்ளவர். பாரதியின் அரசியலையும் தமிழார்வத்தையும் குவளையைவிட நன்றாக ரசிக்கத்தக்கவர் இவர். இவ்விருவரது சகவாசத்தால் பாரதிக்குப் புதுவை வாழ்வு புது வாழ்வாகப் பரிமளித்தது.

புதுவையில் பாரதி "தமிழ் வளர்ப்புச் சங்கம்" என்று ஒரு சங்கம் பிற்காலத்தில் ஆரம்பித்தார். அதற்கு உதவியாக நின்றவர்களில் சுந்தரேசய்யர் ஒருவர். சங்கத்தில் சேருவோர் தடவை ஒன்றுக்கு ஒரு ரூபாயாக மூன்று ரூபாய் சந்தாவை இரண்டு மாதத்தில் செலுத்தவேண்டும். போதிய மூலதனம் சேர்ந்ததும், விஞ்ஞான நூல்கள், பிறமொழிக் காவியங்கள், வசன நூல்கள், தேசாபிமானமும் நல்லொழுக்கமும் ஊட்டும் நூல்கள் முதலியவற்றை எளிய தமிழில் வெளியிடுவதென்றும், மூன்று ரூபாய் கட்டியிருப்பவர்களுக்கு ஐந்து ரூபாய் மதிப்புள்ள நூல்களை அனுப்புவதென்றும் திட்டம்.

இதற்காக விளம்பரத் தாள்கள் அச்சிட விரும்பினர். மகா யுத்த காலம். ஆகையால் எதனாலும் அரசாங்கத் திடம் காட்டி அனுமதி பெற்றே அச்சிடலாம் என்றிருந்தது. சுந்தரேசய்யர் சங்கத்தின் சார்பில் விண்ணப்பம் அனுப்பினார். அரசாங்கம், இந்த "பயங்கரமான ஏற்பாட்டுக்கு" அனுமதி மறுத்துவிட்டது.

சந்தரேசய்யரும் பாரதியும் ஒரு சமயம் ஏதோ மனத்தாங்கல் கொண்டு நான்கு மாதம் சந்திக்காமலிருந்தனர். பாரதி சீக்கிரமே அங்கலாய்க்கலானார். பிறகு இருவரும் சந்தித்தபோது, "எங்ஙனம் சென்றிருந்தீர்" என்ற பாட்டைப் பாடியதாகவும், இது தவறாக ஸரஸ்வதி தோத்திரமென்ற தலைப்புடன் வெளிவந்திருக்கிறது என்றும் குவளைக் கண்ணன் எடுத்துக் காட்டியருக்கிறார்.

சுந்தரேசய்யர் 1955ல் காலமானார்.

22. புதுவை 'இந்தியா'
முன் பக்கம்

புதுவையில் பாரதி கால் வைத்த சின்னாட்களில் சம்பவங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. சென்னையிலிருந்து மண்டயம் ஸ்ரீனிசாஸாச்சாரியார், எஸ்.என். திருமலாச்சாரியார் முதலியோரும் புதுவை வந்து சேர்ந்தார்கள்.

பாரதி புதுவை சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே "இந்தியா" பத்திரிகையின் அச்சகம் கூட மிக ரகசியமாய்ப் புதுவைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது! இது அக்காலத்தில் மகத்தான சாதனையாகும். "இந்தியா" சென்னையில் 1908 செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வரை வெளிவந்தது. புதுச்சேரியிலிருந்து அக்டோபர் 20ஆம் தேதி முதல் மீண்டும் முழங்கத் தொடங்கியது.

புதுவையில் பத்திரிகை நடத்த ஒரு பிரெஞ்சுப் பிரஜை பொறுப்பாளியா யிருக்கவேண்டும் என்ற சட்டமிருந்தது. அதன்படி, எஸ்.லக்ஷ்மீ நாராயணய்யர் என்பரைப் பிடித்து, பத்திரிகையைத் தாம் வெளியிடுவதாய் அனுமதி பெறச் செய்தார்கள். புதுவை எத்ரான்ழேர் தெருவில் 58ஆம் எண்ணில் ஸரஸ்வதி அச்சகம் தோன்றியது; இரண்டே வாரங்களில் "இந்தியா" மீண்டும் "நெருப்பு மழை" பொழியத் தொடங்கியது.

புதுவை வந்ததும் "இந்தியா", முதல் ஆண்டு பழையபடி சிறிய அளவில் வெளிவந்தது. இரண்டாம் ஆண்டு (1908 அக்டோபர்) முதல் பத்திரிகை நின்றுபோன தேதி (1910 மார்ச் 19ஆம் தேதி) வரை மீண்டும் பெரிய அளவில் வந்தது.

சென்னையில் இருந்ததுபோல முதல் பக்கத்திலும் உள்ளேயும் அரசியல் கார்ட்டூன்கள் பிரசுரமாயின. தவிர, பல தேச பக்தர்களது படங்களும் "இந்தியா"வில் வெளியாயின.

புதுவை "இந்தியா"வில் பாரதியின் "ஞானரதம்" தொடர்ந்து வெளியாயிற்று. சில பாடல்களும் வெளியாயின. புதுவை "இந்தியா"வுக்கு முதலாண்டு முடிந்து இரண்டாவதாண்டு ஆரம்பமானபோது, 16.10.1909 இதழில் "புது வருஷம்" என்ற தலைப்பில் "வாழிய செந்தமிழ்" பாடல் வெளிவந்திருக்கிறது.

"இந்தியா"வில் தேசபக்தர்களது நடவடிக்கைகள் நிறைய வெளிவந்தன. பாரதிக்கு "வெடிக்காய் வியாபாரத்தில்" நம்பிக்கை யில்லையெனினும், அக்காலத்திய வெடிகுண்டு வீச்சுகளும் அதிகாரவர்க்கக் கொலைகளும் "இந்தியாவில் குழப்பம்" என்ற தலைப்பில் வாராவாரம் செய்தியாக வந்தன. வெளிநாட்டு விவகாரங்களும் ராய்ட்டர் செய்திகள் மூலம் இடம் பெற்றன. துருக்கி சுதந்திரம் பெற்றது, பாரஸீகம் விடுதலை பெற்றது முதலிய தகவல்கள் தேசபக்தி ததும்ப விவரிக்கப்பட்டுள்ளன. லண்டனில் ஸாவர்க்கர் - டாக்டர் ராஜன் - வ.வே.சு.ஐயர் கோஷ்டியைச் சேர்ந்த மதன்லால் திங்கரா என்ற வாலிபன் ஒரு வெள்ளை அதிகாரியைச் சுட்டது, தென் ஆப்பிரிக்காவில் மோ.க.காந்தியின் போராட்டங்கள் முதலியவை பற்றி செய்திகள் வந்துள்ளன.

சுயராஜ்ய தினம் கொட்டியதற்காக ராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்பெற்ற சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளை வழக்கு, ஸ்வதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முயற்சிகள், தன் கணவரின் தண்டனைக்கு மேல் பிரிவிகௌன்ஸில் அப்பீல் செய்யப் பண உதவி செய்யும்படி வ.உ.சி.யின் மனைவி விடுத்த வேண்டுகோள், கோவைச் சிறையில் பிள்ளையை அவரது தந்தையும் மற்றொரு "ஆப்த நண்பரும்" (பரலி சு.நெல்லையப்பர்) போய்ப் பார்த்து வந்த விவரம், எதிராஜ் சுரேந்திரநாத் ஆரியா சிறையில் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றது, அரவிந்த கோஷின் அற்புதப் பிரசங்கங்களின் மொழிபெயர்ப்புகள் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் - இவை "இந்தியா"வில் வெளியான சில விஷயங்களாகும்.

தலையங்கங்கள் ஒவ்வொன்றும் அழகிய கட்டு போல தேசபக்தியுபதேசம் செய்வதாயிருந்தது. "சுதந்திரம்", "ஸமத்வம்", "ஸகோதரத்வம்" என்ற தலைப்பில் பல தலையங்கங்களும், "பாரத மக்கள்", "சிற்பமும் கவிதையும்" என்ற தலையங் கங்களும் வெளியாயின.

பத்திரிகை கடைசி நாலைந்து பக்கங்கள் முழுதும் விளம்பரங்களாயிருந்தன. காசிப் பட்டுப் பீதாம்பரம், பலவித புத்ககங்கள், நவீன சாமான்கள். தாதுபுஷ்டி மருந்துகள் இவைகளின் தயாரிப்பாளர்களுக்குக் கூட "இந்தியா"வின் மதிப்பு நன்கு தெரிந்திருந்தது! "இந்தியா" புதுவையில்கூட விளம்பரத்துக்கு சிரமப்படவில்லை. இது இன்றும் வியப்பளிக்கும் விஷயமாகும்.

தமழ்ப் பத்திரிகை உலகில் இன்றும் சாதிக்கப் பெறாத மற்றொரு புதுமையும் "இந்தியா" செய்து காட்டிற்று. வர்த்தமானச் செய்திகளை, சிற்றூர்ச் செய்திகளை எளிய தமிழில் சுருக்கமாய் எழுதி அனுப்புவோருக்குச் சன்மானம் தந்தது "இந்தியா".

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur