சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
18
35. குயில் பாட்டுத் தோப்பு
முன் பக்கம்
   

"வெல்லச்சு" கிருஷ்ணசாமி செட்டியாருக்குப் புதுவையை யடுத்த முத்தியாலுப்பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு அழகான தோப்பு இருந்தது. அந்த தோப்பில் பாரதியார் மணிக்கணக்காய்ச் சஞ்சரித்திருப்பார். இந்தத் தோப்பே பாரதியின் "குயில் பாட்"டிற்குக் காட்சி ஸ்தலம். தமிழ் உள்ளளவும் சாகா வரம் பெற்றுவிட்டது இந்தத் தோப்பு!

ஒரு சில மனிதர்களின் முகத்தையே திரும்பத் திரும்பப் பார்க்க நேர்ந்தால் சலித்துப் போவது மனிதரின் இயற்கை. கவிகளுக்கோ கேட்க வேண்டாம். எப்போதும் புதுமை நாடிய பாரதியார் புதுவையிலிருந்த காலத்தில், வீட்டில் இருந்த நேரம் மிகக் குறைவு; நண்பர்களுடன் அளவாளாவுதல்கூட அவருக்கு எளிதில் சலித்துவிடும். கவிதா சிருஷ்டி வெறி வந்துவிட்டாலோ, அவருக்கு எங்கும் இருக்க இருப்புக் கொள்ளாது.

தோட்டங்களில் பச்சைப் பசேலென்ற காட்சிகளிலும், பட்சிகளின் கீதத்திலும் 'ஜிவ்'வென்ற வானில் எழுந்து செல்லும் சிட்டுக் குருவிகளின் பறப்புத் திறமையிலும், வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலின் பெருமூச்சிலும், இளவெயிலின் மாட்சியிலும், அந்தி வளை அஸ்தமன வர்ணஜாலத்திலும் பாரதி தம் துயர்களையெல்லாம் மறந்து போவார். "எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா! இறைவா!" என்று மனம் குளிர்ந்து பாடுவார்.

கவிதை பிறக்கும் சமயம் அவர் பிரசவ வேதனைப் படுவார். ஸரிக-க-காமா என்று வாய்க்குள்ளேயே பாடுவார். புதிய பாட்டுக்கு ஸ்வரம் போட்டுக்கொண் டிருக்கிறாரென்று பக்கத்தி லிருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் தாம் படும் வேதனையைக் கண்டவர் பார்த்து நகைக்க அவர் விரும்ப மாட்டார். உற்ற நண்பர் எவரையேனும் கூட்டிக் கொண்டு கிருஷ்ணசாமி செட்டியார் தோப்புக்கோ, வில்லியனூரில் உள்ளதோர் தோட்டத்துக்கோ போய்விடுவார்.

இயற்கையழகில் தம் நினைவை மறந்துவிடுவார். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; மடுவை உற்று நோக்குவார். வானத்தை நிமர்ந்து, மார்பை முன்னே தள்ளி, காலால் தாளம் போட்ட வண்ணம் புதிய பாட்டின் ஸ்வரங்களை உரக்கப் பாடுவார். பாட்டு சரியாக வந்தால் போச்சு, வராவிட்டால் பூமிக்கு பலமாக ஓர் உதை! மௌனம். "சொல் ஆழி வெண் சங்கே!" என்ற கூப்பாடு அல்லது "மத்தகஜம் என வளர்த்தாய்!" என்ற தாயுமானவர் கண்ணி. மீண்டும் ஸ்வரங்களைப் பாடுதல். முடிவில் பாடல் வெற்றிகரமாய் வெளிவரும். ஆனந்தம், பேரானந்தம்! பாரதியின் மெலிந்த உடலில் பேரானந்தம்! பாரதியின் மெலிந்த உடலில் இருக்கும் அத்தனை உயிரையும் பிழிந்தெடுத்து, அமிர்த வெள்ளமாய்க் கொட்டுவாள் கவிதா தேவி!

"செந்தமிழ்த்தென் புதுவையெனுந் திருநகரின் மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை" என்ற குயில்பாட்டுத் துவக்கத்தில் வர்ணிக்கப்படும் முத்தியாலுப்பேட்டைத் தோப்பு பாரதியாருக்கு ஆனந்தமான புகலிடமாக இருந்தது.

நள வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி (22.11.1916) புதுவையில் கடுமையான புயல் அடித்தது. "திக்குக்கள் எட்டும் சிதறி" என்ற பாட்டில் அன்றைய நிலையை பாரதி வர்ணித்திருக்கிறார். அன்று தெய்வம் பாரதி குடும்பத்தைக் காத்த விவரமும், புருஷன் மனைவி சம்பாஷணையாக, "காற்றடிக்குது கடல் குமுறுது" என்ற பாட்டில் வெளி வந்துள்ளது.

அன்றைய புயலில், முத்தியாலுப்பேட்டையிலுள்ள அத்தனை தோப்புகளும் நாற்றினைப் போல் சிதறி வீழ்ந்திருக்க, கிருஷணசாமி செட்டியாரின் தென்னந்தோப்பு ஒன்று மட்டும் சேதமின்றி நின்றது!

குயில் பாட்டு மாஞ்சோலை நிழல் நிறைந்து, என்ன வெயிலடித்தாலும் உறைக்காத அதன் குளிர் தரு நிழலிலிருந்து வெளியே பார்த்தால், கண்ணுக் கெட்டும் தூரம் வரை பசுமையான வயல் தெரியும், அந்த வயல் வெளிகள் நடுவே ஒரு தென்னந் தோப்பு தன்னந் தனியாய் நிற்கும். சுற்றியிருந்த மரங்களெல்லாம் வீழ்ந்துவிட இத்தோப்பு மட்டும் எஞ்சி நின்ற அதிசயத்தை, "பிழைத்த தென்னந் தோப்பு" என்ற பாடலில் பாரதி பாடியிருக்கிறார்.

"சிறிய திட்டையினிலே - உளதோர்
தென்னஞ் சிறு தோப்பு
வறிய வனுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை"

36. புதுவைக் கடற்கரை
முன் பக்கம்

புதுவைக் கடற்கரை சென்னைக் கடற்கரை போல் விரிந்ததல்ல. என்றாலும் அச்சிறு கடற்கரையும் அழகானதே. சென்னையில் இல்லாத ஒரு விசேஷம் புதுச்சேரியில் இருக்கிறது. கடலுக்குள்ளே இரண்டு பர்லாங்கு தூரம் உள்ளே செல்லும் இரும்பு வாராவதி யொன்று புதுவையில் உண்டு. கப்பல்கள் வந்து தங்க புதுவையில் துறைமுகம் இல்லை. சில மைலுக்கப்பால் நிற்கும் கப்பல்களிலிருந்து மக்களையும் சாமான்களையும் இறக்கி வரும் படகுகள் 'பியர்' என்ற இந்த இரும்பு வாராவதியில் கொண்டு வந்து இறக்கிக் கரை சேர்க்கும். இந்தப் பாலம் கடலாலும் புயலாரும் ஜீரணிக்கப்படடு, இப்போது முன்பு இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு நீளமே இருக்கிறது. இதற்குத் தெற்கே கடலில் பெரியதொரு பாலம் கட்ட இப்போது ஏற்பாடாகியுள்ளது.

முழுதாக இருந்த இரும்புப் பாலம் நகர மக்கள் மாலை வேளையில் காற்று வாங்குவதற்கும் உலாவுவதற்கும் பெஞ்சுகளில் அமர்ந்து பொழுது போக்கவும் வசதியாக இருந்தது. பாரதியும் நண்பர்களும் இந்தப் பாலத்தில் உலவுவதுண்டு. கடற் பாலத்திலிருந்து பார்த்தால் புதுவை நகரம் அழகான காட்சியாய்த் தெரியும்.

பாலத்துக்குப் பக்கத்தில் உள்ள மணல் கரையிலும் பாரதியும் நண்பர்களும் பொழுது போக்குவார்கள். "மழை" என்ற கட்டுரையிலும், "கடற்காலத்தில் வர்ணாசிரம சபை" என்ற கட்டுரையிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் பாரதியால் விவரிக்கப்படுகின்றன.

கடலில் ஸ்நானம் செய்வதிலும் பாரதிக்கும் பிரியம். ஞாயிறு தோறும் பாரதி, வ.வே.சு.அய்யர், ஸ்ரீநிவாஸாச்சாரியார் முதலியோர் குழந்தைகளுடன் காலையில் கடலில் ஸ்நானம் செய்வார்கள். பாரதிக்கு நீந்தத் தெரியாது. அய்யர் நன்றாக நீந்துவார்.
ஒரு நாள் பாரதியார் தம் குழந்தைகளைக் கடலில் ஸ்நானம் செய்வித்துக் கொண்டிருந்தார். அலைகளைக் கண்டு குழந்தைகள் கரை நோக்கி ஓடின; பாரதி அவர்களைப் பின் தொடர்ந்து ஓடிப் பிடித்து நீருக்கு அழைத்துச் சென்றார். இப்படிச் சிறிது நேரம் நடந்ததும், தங்களைச் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டத்தையும், ஏதோ அதட்டிக் கொண்டு முன்னே வரும் ஒரு போலீஸ்காரனையும் பாரதி கண்டார். போலீஸ்காரன் பாரதியை அதட்டி மிரட்டினான்! நடந்ததென்ன வென்றால், தாடி மீசையுடனிருந்த பாரதி குழந்தைகளை துரத்திப் பிடித்ததைப் பார்த்த ஒருவன் யாரோ ஒரு பேர்வழி குழந்தைகளைப் பிடித்துச் சுமுத்திரத்தில் மூழ்கடித்துக் கொல்லப் பார்ப்பதாக நினைத்துவிட்டான். அத்துடனில்லாமல், சமீபத்திலிருந்து ஒரு போலீஸ்காரனிடம் இத்தகவலைத் தெரிவித்து, அவனை அங்கே அழைத்து வந்துவிட்டான்!

உண்மை தெரிந்ததும் போலீஸ்காரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போனான்.

மற்றவர்களெல்லாம் காலையோ மாலையோ மட்டும் வந்து கடற்கரையின்பத்தை நுகர்வார்கள். ஆனால் பாரதிக்கு நேர நியதி கிடையாது. உச்சிப் பகலில் வருவார், நள்ளிரவிலும் வருவார். பல சமயங்களில் தூக்கம் வராமலோ, கற்பனா வெறியிலோ கடற்கரைக்கு வந்தவர், இரவெல்லாம் அங்கேயே தங்கிவிடுவார். வறுமையை மறக்க சாதனமாக உபயோகப்பட்ட லாஹிரி போதையும் சேர்ந்து மெய்மறந்து ஆடிப்பாடி பிறருக்கு இம்சையின்றிக் கவிதைக் களிப்பில் மூழ்கியிருக்கவும் கடற்கரை பயன்பட்டது.

மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி யதுகிரி அம்மாள் தமது "பாரதி நினைவுகள்" நூலில் இத்தகையதோர் சம்பவத்தை விவரித்துள்ளார். ஒரு நாள், அதிகாலையில், சிறுமி யதுகிரியும் அவளது தந்தையும் தங்கையும் கடற்கரையில் உலவி வருகின்றனர். அப்போது, "எங்கிருந்தோ பாட்டுச் சத்தம் கேட்டது. உதய ராகத்திலே உள்ளத்தை உருக்கும்படி மதுரமாக இருந்தது அந்தப் பாட்டு. சிறிது உற்றுக் கேட்டதில் அது திருவாய் மொழிப் பாட்டு என்பதும் புலனாயிற்று... மூவரும் பாட்டின் ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்றோம். அங்கே ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறப்புச் சொக்காய். கச்சை போட்ட வேஷ்டி. கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பால சூரியனை நோக்கியபடி பாடிக் கொண்டிருந்தார் அவர்."

இரவு அங்கே வந்த பாரதியார், விடியற்காலை வரையிலும் கடற்கரையிலேயே இருந்திருக்கிறார்! கேட்டால், "கற்பனா உலகத்தில் பறந்துகொண்டிருந்தேன்!" என்கிறார்! என்னதான் வர கவியாக இருந்தாலும், வேளாவேளைக்கு வீட்டுக்கு வராத புருஷர் மனைவி மக்களுக்கு எவ்வளவு கவலையை அளித்திருக்க வேண்டும்!

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur